ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கப்பிரிவு வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

Update: 2019-11-15 23:15 GMT
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். அவரை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தனிக்கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, சி.பி.ஐ. வழக்கில் ஜாமீன் கிடைத்த போதிலும் அவரால் திகார் சிறையில் இருந்து வெளியே வரமுடியவில்லை.

இந்த நிலையில் அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ் குமார் கெயித் முன்னிலையில் நடைபெற்றது. மனு மீதான விசாரணை கடந்த 8-ந்தேதி முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிபதி சுரேஷ் குமார் கெயித் தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ப.சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் ஆபத்து கிடையாது. ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பும் இல்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ய உள்ளதால் சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பும் இல்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான கார்த்தி சிதம்பரத்துக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் இந்த வழக்கு தொடர்பான குற்றம் தீவிரத்தன்மை கொண்டது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு முக்கிய பங்கு உள்ளதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் உள்ளன.

இந்த வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்கள், கார்த்தி சிதம்பரத்தால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் பெயர்களில் தரப்பட்டதாக கூறப்படும் ரசீதுகள், வங்கி கணக்குகள் ஆகியவை தீவிரத்தன்மை கொண்டது என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது. இதனால் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது.

இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் விசாரணை ஆகியவை சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையில் இருந்து மாறுபட்டதாகும்.

இதுபோன்ற பொருளாதார குற்றங்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும். வழக்குகளில் ஜாமீன் வழங்க சட்டப்படி முன்னுரிமை அளிக்க வேண்டும்; விதிவிலக்காகத்தான் சிறையில் அடைக்க வேண்டும் என்று இருந்தாலும் இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவது சமுதாயத்துக்கு தவறான செய்தியாக அமைந்துவிடும். எனவே ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்