5 சதவீத சரிவு இல்லை: பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து வேகமாக வளருகிறது - மத்திய மந்திரி தகவல்

இந்திய பொருளாதாரத்தில் 5 சதவீத சரிவு இல்லை. இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்துவரும் நாடாகவே உள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்தார்.

Update: 2019-11-18 23:00 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஆம் ஆத்மி எம்.பி. பாக்வந்த் மான், இந்திய பொருளாதாரத்தில் 5 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இதற்கு நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாகூர் பதில் அளித்து பேசியதாவது:-

இந்திய பொருளாதாரத்தில் 5 சதவீத சரிவு எதுவும் இல்லை. எங்கிருந்து இந்த புள்ளிவிவரத்தை பெற்றீர்கள், எங்களுக்கு காட்டுங்கள். இந்தியா தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாகவே இருக்கிறது. 2025-ம் ஆண்டில் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இருக்கும்.

பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவே அரசு பெரிய அளவில் சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்தது. தொழிற்சாலைகளுக்கு வரி சலுகைகள் வழங்கப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதி வழங்கப்பட்டது. பல வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. கருப்பு பணத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பண மதிப்பு இழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. அமல் போன்ற நடவடிக்கைகளால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. தேசிய புள்ளிவிவர அலுவலக தகவல்படி 2014-19 காலகட்டத்தில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 7.5 சதவீதமாக உள்ளது. இது ஜி-20 நாடுகளிலேயே அதிகமானது.

உலக பொருளாதார கண்ணோட்டம் நடத்திய ஆய்வின்படி இந்த ஆண்டு அக்டோபரில் உலகளவில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டில் ஜி-20 நாடுகளில் இந்தியா வேகமாக வளர்ந்துவரும் நாடு என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க சமீபத்தில் மத்திய அரசு கம்பெனி வரி விகிதத்தை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்தது. குறிப்பாக புதிய உள்நாட்டு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது உலகிலேயே மிகவும் குறைந்த அளவு.

2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின்னர், உலக வங்கியின் எளிதாக தொழில் தொடங்குவதற்கான நாடுகள் பட்டியலில் 2019-ம் ஆண்டு இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-ம் இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்