ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

Update: 2019-11-19 13:29 GMT
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு வருகிற 27-ந்தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதால், அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அமலாக்கப்பிரிவு வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் கெயித், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்து கடந்த 15-ந்தேதி தீர்ப்பு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரியும் அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்