பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு; மராட்டிய அரசியலில் பரபரப்பு

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார்.

Update: 2019-11-20 10:15 GMT
மும்பை, 

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதில் சிவசேனா தீவிரமாக உள்ளது. இந்த 3 கட்சிகளின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் டெல்லியில் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். 

அப்போது, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியாகாந்தியிடம் பேசவில்லை என சரத்பவார் கூறினார்.

இதனால் புதிய அரசு அமைவதில் மீண்டும் குழப்பம் நிலவியது. இந்த பரபரப்புகளுக்கு  மத்தியில், பிரதமர் மோடியை  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இன்று சந்தித்து பேசினார். மராட்டியத்தில், விவசாயிகள் சந்தித்துள்ள பிரச்சினைகளை பற்றி இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும்,  அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய சந்திப்பாக இது பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சரத்பவார் - பிரதமர் மோடி சந்திப்பு குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, "சரத் பவார் ஒரு மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய வேளாண்துறை அமைச்சர். ஆகவே, பிரதமரைச் சந்தித்து நாட்டில் விவசாயிகளின் துயரங்களைப் பற்றி அவருக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டேன்" அதன் அடிப்படையிலே இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்றார்.  

மராட்டியத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி உடைந்த நிலையில்,  எந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றாலும், சரத்பவாரின் ஆதரவு முக்கியமானதாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில், அவருக்கு நாட்டின் உயரிய பதவியான குடியரசுத்தலைவர் பதவியை தருவதாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்