41 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசுக்கு சரத்பவார் செய்த துரோகத்தை நினைவூட்டிய அஜித் பவார்

41 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசுக்கு சரத்பவார் செய்த துரோகத்தினை அஜித் பவார் நினைவூட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-11-23 23:00 GMT
புதுடெல்லி,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக இருந்த அஜித் பவார், கட்சித்தலைவர் சரத்பவாருக்கு நம்பிக்கை துரோகம் அளித்தது மராட்டிய அரசியலில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் இதே அதிர்ச்சியை கடந்த 41 ஆண்டுகளுக்கு முன் சரத்பவார், காங்கிரஸ் கட்சிக்கு செய்திருந்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த 1978-ம் ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ், காங்கிரஸ் (எஸ்) என இரண்டாக பிரிந்தது. இதில் தற்போதைய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் (எஸ்) கட்சியில் இருந்தார். பிப்ரவரியில் மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது.

இதில் காங்கிரஸ் (எஸ்), இந்திரா காங்கிரஸ் மற்றும் ஜனதா கட்சிகள் முறையே 69, 65 மற்றும் 99 இடங்களை பெற்றன. எனினும் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் வகையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனவே காங்கிரசின் இரண்டு பிரிவுகளும் ஒன்று சேர்ந்து மாநிலத்தில் கூட்டணி அரசு அமைத்தன. ஆனால் இரு பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதவிச்சண்டையால், அரசை சுமுகமாக நடத்த முடியவில்லை. அப்போது சரத்பவார் தனது அரசியல் சாணக்கியத்தனத்தை வெளிப்படுத்தினார்.

ஜனதா கட்சித்தலைவர் சந்திரசேகருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, கூட்டணி அரசில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கத்தொடங்கினார். அதன்பயனாக 38 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்து வெளியேறினார். இதனால் மராட்டிய அரசு கவிழ்ந்தது.

பின்னர் இந்த உறுப்பினர்கள், ஜனதா கட்சி மற்றும் விவசாய தொழிலாளர்கள் கட்சி மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து வானவில் கூட்டணி ஒன்றை உருவாக்கினார். அதன்மூலம் தனது 38-வது வயதில் மராட்டியத்தின் இளம் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

எனினும் மத்தியில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானதை தொடர்ந்து, 1980-ல் சரத்பவாரின் அரசு கலைக்கப்பட்டது.

இவ்வாறு காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவார் அன்று செய்த துரோகத்தை, 41 ஆண்டுகளுக்குப்பின் அவரது உறவினரே (அஜித் பவார்) அவருக்கு திரும்ப செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்