பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்; பிரதமர் மோடி தகவல்

பா.ஜனதா தலைமையிலான 2-வது அரசு அமைந்து 6 மாதம் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Update: 2019-12-01 00:00 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 30-ந் தேதி பதவி ஏற்றார். அவரது தலைமையில் 2-வது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து நேற்றுடன் 6 மாதங்கள் நிறைவடைந்தது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் ‘முதல் 6 மாதங்களில் இந்தியா’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 6 மாத காலங்களில் மேம்பட்ட வளர்ச்சிக்காகவும், சமூக அதிகாரமளித்தலை துரிதப்படுத்தவும், இந்தியாவின் ஒற்றுமையை மேம்படுத்தவும் நாங்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். 370-வது சட்டப்பிரிவுக்கு முற்றுப்புள்ளி முதல் பொருளாதார சீர்திருத்தம் வரை, ஆக்கப்பூர்வமான நாடாளுமன்றம் முதல் தீர்மானமான வெளிநாட்டு கொள்கை வரை வரலாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வரவிருக்கும் காலங்களில் இன்னும் அதிகமானவைகளை செய்ய ஆவலுடன் இருக்கிறோம். இதன்மூலம் நாங்கள் வளமான மற்றும் முன்னேறிய புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.

‘அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை’ என்ற எண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, 130 கோடி இந்தியர்களின் ஆசியுடன் ‘வளர்ந்த இந்தியா, 130 கோடி இந்தியர்களின் மேம்பட்ட வாழ்க்கை’ ஆகியவற்றை முன்னெடுத்து புதுப்பிக்கப்பட்ட வலிமையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமரை தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் டுவிட்டரில் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், “பிரதமர் மோடி தலைமையிலான 2-வது அரசு இன்றுடன் 6 மாதகாலத்தை நிறைவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் பல கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விடைகாண்பது, தலையீடுகள் என பொருளாதாரத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடரும்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்