பாலியல் பலாத்காரம்: ஜாமீனில் வந்த குற்றவாளி புகார் கொடுத்த பெண்ணை தீவைத்து எரித்தார்

பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த குற்றவாளி புகார் கொடுத்த பெண்ணை தீவைத்து எரித்தார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-12-05 10:47 GMT
லக்னோ,

பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்குவது, பெண்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என  சமூக ஆர்வலர்கள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளி, ஜாமீனில் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளார்.

அதுபோல், பீகாரை சேர்ந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டு உள்ளார்.  பீகாரை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை,  சிவம் திரிவேதி (வயது 24) என்ற வாலிபர்  காதலித்து வந்தார். அவர்,  அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து  கொள்வதாக கூறி கடந்த டிசம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ரபரேலி அழைத்துச் சென்று  அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர், அந்த இளம் பெண்ணுடன் ரபரேலியில் ஒரு வாடகை  வீட்டில் வசிக்கத் தொடங்கினார். அவரை, இளம் பெண் திருமணம் செய்ய வற்புறுத்தவே அந்த பெண்ணை  வெளியேற விடாமல்  வீட்டிற்குள் அடைத்து வைத்து மிரட்டி உள்ளார். திருமணம் குறித்து பேசினால் அவளையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதாக மிரட்டி உள்ளார்.

ஒரு நாள் அங்கிருந்து  வெளியேறிய இளம் பெண்  தனது அத்தையுடன் ரபரேலியில் வேறொரு இடத்தில் வசித்து வந்தார்.

பின்னர், டிசம்பர் 12, 2018 அன்று, அந்த இளம் பெண்ணின் இருப்பிடத்தை சிவம் திரிவேதி கண்டுபிடித்தார். உடனடியாக அவர், தனது உறவினர் சுபம் திரிவேதியுடன் சென்று  இளம் பெண்ணிடம் சமரசம் பேசி உள்ளனர்.  

பின்னர் கோவிலுக்கு செல்லலாம் என கூறி, இளம் பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதை தொடர்ந்து  பாதிக்கப்பட்ட இளம் பெண் கொடுத்த புகாரில் கடந்த மார்ச் 4 ந்தேதி சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி இருவர் மீதும் போலீசார்  வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கில்  கைது செய்யப்பட்டு இருந்த குற்றவாளி  சிவம் திரிவேதி கடந்த வாரம் ஜாமீனில் வெளியேவந்து உள்ளார். இந்த நிலையில் அவர், 4 நபர்களுடன்  பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை சமரசம் செய்ய  கிராமத்திற்கு சென்று உள்ளார். அங்கு அந்த இளம் பெண்ணை வயல்வெளிக்கு அழைத்து சென்று அவர் உடல் மீது  மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டு ஓடி விட்டனர்.

90 சதவீத தீக்காயங்களுடன் லக்னோ மருத்துவமனையில் அந்த இளம் பெண்  உயிருக்காக போராடி வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் கைது செய்து உள்ளதாக உன்னாவ் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு  காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி  கண்டனம் தெரிவித்து உள்ளார்.  உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கெட்டு உள்ளது.  முதல்வர்,  சட்டம் ஒழுங்கு குறித்து பொய்களை பரப்புவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் செய்திகள்