விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு தகவல்

விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Update: 2019-12-06 23:15 GMT
புதுடெல்லி,

மழை வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், நாடு முழுவதும் வெங்காயம் வரத்து குறைந்து இருக்கிறது. இதனால் அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சமையலுக்கு பயன்படும் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மூலமாக உறுப்பினர்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில் வெங்காய விலை உயர்வு தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத்துறை இணை மந்திரி தன்வே ராவ்சாகிப் தாதாராவ் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தாமதமாக தொடங்கி நீண்ட நாட்கள் பருவமழை பெய்ததால் நாட்டின் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ற சாகுபடி இல்லாததால் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில் இருவேறு கருத்துகள் இல்லை.

எனினும் மத்திய அரசு அதிக அளவில் வெங்காயத்தை இருப்பு வைத்து, அதில் இருந்து வினியோகித்து வந்தது. தற்போது உள்நாட்டு தேவையை சமாளிக்கவும், அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவும் பல்வேறு நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.

மத்திய அரசின் வர்த்தக நிறுவனமான எம்.எம்.டி.சி. இந்த இறக்குமதியை செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயம் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமையல் எண்ணெயை பொறுத்தவரை, உள்நாட்டு தேவையை சமாளிக்கும் வகையில் உற்பத்தி இல்லை. உள்நாட்டு தேவையில் வெறும் 40 சதவீதத்தை மட்டுமே உள்நாட்டு உற்பத்தி மூலம் ஈடுகட்ட முடியும். மீதமுள்ள 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதேநேரம் உள்நாட்டிலேயே சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு தன்வே ராவ்சாகிப் தாதாராவ் கூறினார்.

மேலும் செய்திகள்