வெங்காய விலை உயர்வு: மத்திய மந்திரி பஸ்வான் மீது வழக்கு

வெங்காய விலை உயர்வு தொடர்பாக, மத்திய மந்திரி பஸ்வான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2019-12-07 19:26 GMT
முசாபர்பூர்,

இந்தியாவில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில், அவர் மீது பீகார் மாநிலம் முசாபர்பூர் சிவில் கோர்ட்டில் சமூக ஆர்வலர் ராஜூ நாயர் என்பவர் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், வெங்காய விலையை ஆய்வு செய்ய தவறிவிட்டார். மேலும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதால் காய்கறி விலை உயர்ந்துள்ளது என அறிக்கைகள் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார். எனவே அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி இருந்தார்.

இந்த வழக்கு வருகிற 12-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சூர்யகாந்த் திவாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்