நித்யானந்தா வழக்கில், திடீர் திருப்பம்: பெண் சீடர்கள் விர்ஜீனியாவில் தாங்கள் இருப்பதாக பிரமாண பத்திரம்

நித்யானந்தா தொடர்பான வழக்கில், திடீர் திருப்பமாக பெண் சீடர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அமெரிக்காவின் விர்ஜீனியாவில் தாங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-12 07:51 GMT
புதுடெல்லி

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இயங்கி வந்த ஆசிரமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் 3 மகள்கள் மற்றும் 1 மகன் ஆகியோர் நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.

ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சித்ரவதை செய்வதாகவும், குழந்தைகளை பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்றும் ஜனார்த்தன சர்மா ஆமதாபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி 1 மகள் மற்றும் மகனை மீட்டனர்.

ஆனால் மற்ற 2 மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. அவர்களை மீட்டுதரக்கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த ஆமதாபாத் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் நித்யானத்தா மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஒடியது விசாரணையில் தெரிய வந்தது.

நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என பெயர் சூட்டி அதனை தனிநாடாக அறிவிக்கும் முயற்சியில் இறங்கியதாக தகவல் வெளியானது. ஆனால் ஈக்வடார் அரசு இதனை மறுத்துள்ளது.

தலைமறைவாக இருந்தாலும் நித்யானந்தா அடிக்கடி ‘பேஸ்புக்’ மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். வீடியோக்கள் வெளியிடப்படும் கம்ப்யூட்டர் முகவரியான ஐ.பி.முகவரியை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அவர் பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் பதுங்கி இருக்கலாம் என கண்டு பிடித்துள்ளனர். அவரை கைது செய்ய குஜராத் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் நித்யானந்தாவின் சீடர்களாக மாறியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது போலீசாரை நீதிபதி கடுமையாக சாடினார்.

அதற்கு போலீசார் தரப்பில், ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சாலைமார்க்கமாக நேபாளம் சென்றுள்ளனர். அங்கிருந்து கரீபியன் தீவான டிரினிடாட்டுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு 20-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சார்பில் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் எங்களுடைய தந்தை ஜனார்த்தன சர்மாவுடன் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் அமெரிக்காவின் விர்ஜீனியாவில் இருக்கிறோம். ஆனால் சரியான இடம் குறித்த விவரம் எங்களுக்கு தெரியாது என கூறி உள்ளனர்.

அவர்களின் சார்பில் கோர்ட்டில் வாதாடிய வக்கீல் கூறுகையில், ‘பெண்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சமூக வலைதளத்தில் உரையாடிய பிறகு தான் அவர்கள் விர்ஜீனியாவில் இருக்கிறார்கள் என தெரிந்தது. ஆனால் தெளிவான முகவரி இல்லை. கோர்ட்டு சம்மதித்தால் அவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறார்கள்’ என கூறினார்.

இதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதிக்குள் வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்