நிதி நிலைமை சீரடைந்ததும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமை மத்திய அரசு உறுதி

பி.எஸ்.என்.எல்-ன் நிதி நிலைமை சீரடைந்ததும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

Update: 2019-12-12 23:40 GMT
புதுடெல்லி,

மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அந்த நிறுவனம் கடனில் தத்தளித்து வருவதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பல மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் நிலுவையில் உள்ளது.

இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பினர். இதற்கு மத்திய தொலைத்தொடர்பு இணை மந்திரி சஞ்சய் சம்ராவ் தோட்ரே நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒப்பந்த தொழிலாளர்கள்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தற்போதைய நிலைமை ஒட்டுமொத்த அவைக்கும் தெரியும். எனவே பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிரூட்டும் திட்டம் ஒன்றை மத்திய அரசு அளித்து உள்ளது.

இதன் மூலம் இந்த நிறுவனத்தின் நிலைமை சீரடைந்ததும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதைப்போல போதுமான நிதியை ஏற்பாடு செய்ததும், பி.எஸ்.என்.எல்-ன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும்.

விருப்ப ஓய்வு திட்டம்

பி.எஸ்.என்.எல்-ல் பணியாற்றும் சுமார் 1½ லட்சம் தொழிலாளர்களில் சுமார் 1 லட்சம் பேர் விருப்பு ஓய்வு திட்டத்துக்கு தகுதியானவர்கள் ஆவர். இதற்காக விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் தற்போது 78 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்களும், 13,500 எம்.டி.என்.எல். ஊழியர்களும் விருப்பு ஓய்வு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். இந்த பட்டியலை ஜனவரி 31-ந்தேதிக்குள் அரசு இறுதி செய்யும்.

இவ்வாறு மந்திரி சஞ்சய் சம்ராவ் தோட்ரே கூறினார்.

ஓய்வூதிய உயர்வு பிரச்சினை

இதைப்போல ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் ஓய்வூதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருந்ததாவது:-

பி.எஸ்.என்.எல்-ன் மோசமான நிதி நிலைமை காரணமாக ஓய்வூதியத்துக்கான சம்பள விகிதத்தை உயர்த்தும் கோரிக்கையை அரசால் ஏற்க முடியவில்லை. எனவே தற்போதைய நிலையில் ஓய்வூதிய உயர்வு கோரிக்கையை ஏற்க முடியாது.

ஓய்வூதிய உயர்வு விவகாரம், பணியில் உள்ள ஊழியர்களின் சம்பள உயர்வுடன் தொடர்புடையது. ஏனெனில் ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும்போது பெற்ற அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எனவே பணியில் இருக்கும் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தினால் மட்டுமே ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்