ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நாராவனே நியமனம் - சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-12-16 16:02 GMT
புதுடெல்லி,

ராணுவ தளபதி பிபின் ராவத் வருகிற 31-ந் தேதி ஓய்வுபெறுவதையொட்டி புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நாராவனே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் ராணுவ கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

இந்திய ராணுவ தளபதியாக உள்ள பிபின் ராவத் வருகிற 31-ந் தேதி ஓய்வுபெறுகிறார். இதையொட்டி தற்போது 13 லட்சம் ராணுவ வீரர்களின் துணை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நாராவனே புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை தளபதி பொறுப்பை ஏற்கும் முன்பு, இவர் கிழக்கத்திய கமாண்டிங் அதிகாரியாக இருந்தார். இந்த பகுதி சீனாவின் 4 ஆயிரம் கிலோ மீட்டர் எல்லையை கொண்டது.

37 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றியுள்ள இவர் தனது பள்ளி படிப்பை புனேயிலும், ராணுவ கல்வியில் முதுநிலை பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் முடித்தார். டேராடூன் இந்திய ராணுவ அகாடமி, புனே தேசிய ராணுவ அகாடமியிலும் பயின்றுள்ளார்.

காஷ்மீர், வடகிழக்கு பிராந்தியம், கிழக்கு பிராந்தியம் ஆகிய பகுதிகளிலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையிலும் அங்கம் வகித்தார். மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தில் 3 வருடங்கள் பணியாற்றி உள்ளார்.

சேனா விருது, விசிஷ்ட் சேவா விருது, ஆதி விசிஷ்ட் சேவா விருது, பரம் விசிஷ்ட் சேவா விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மனைவி வீணா ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்