பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான கட்டமைப்பினை உருவாக்குவோம்; மகளிர் ஆணைய தலைவி

நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான கட்டமைப்பினை உருவாக்குவோம் என டெல்லி மகளிர் ஆணைய தலைவி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-12-17 11:25 GMT
புதுடெல்லி,

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றிய வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் திசா மசோதாவை நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவியான சுவாதி மலிவால் கடந்த 3-ந் தேதி டெல்லி ராஜ்காட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து கடந்த 12 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அவரது உடல் எடை 7 முதல் 8 கிலோ வரை குறைந்தது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடல்நிலையை கவனத்தில் கொண்டு போராட்டத்தினை கைவிடும்படி அவரிடம் கேட்டு கொண்டனர்.

எனினும் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அவரது உண்ணாவிரத  போராட்டம் தொடர்ந்தது. இதனிடையே, திசா மசோதாவை கொண்டு வந்ததற்காக ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து மலிவால் கடிதமும் எழுதினார்.

13 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்த நிலையில் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் அவர் மயக்கம் அடைந்து உள்ளார். இதனால் அவரை டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து இன்று அவர் வீடு திரும்பினார்.  இதனை அடுத்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், உடலில் இன்னும் அதிக பலவீனம் உள்ளது. ஆனால் இன்று நலமுடன் இருக்கிறேன் என உணர்கிறேன். 13 நாட்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுற்றது.

ஆனால், நான் அதிக மகிழ்ச்சியான உணர்வில் இருக்கிறேன்.  நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஒரு கடுமையான கட்டமைப்பினை உருவாக்க நாம் ஒப்புக் கொள்வோம்!  ஜெய்ஹிந்த்! என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்