மராட்டியத்தில் பழம்பெரும் நடிகரான ஸ்ரீராம் லாகூ காலமானார்

மராட்டியத்தில் பழம்பெரும் நடிகரான ஸ்ரீராம் லாகூ நேற்றிரவு உடல்நல குறைவால் காலமானார்.

Update: 2019-12-18 02:36 GMT
புனே,

மராட்டியத்தில் இந்தி திரையுலகை சேர்ந்தவர் புகழ்பெற்ற நடிகர் ஸ்ரீராம் லாகூ (வயது 92).  புனே நகரில் தனது வீட்டில் வசித்து வந்த அவர் நேற்றிரவு 8 மணியளவில் மாரடைப்பினால் காலமானார்.

அவரது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.  அவர் வந்தபின் இறுதி சடங்குகள் நடைபெறும் என லாகூவின் மனைவி தீபா லாகூ அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

அறுவை சிகிச்சைக்கான பயிற்சி பெற்றவரான லாகூ, நாடு விடுதலை அடைந்த பின்பு மராட்டியத்தில் திரையுலகம் வளர்ச்சி அடைவதில் முக்கிய பங்காற்றினார்.  விஜய் தெண்டுல்கர், விஜய் மேத்தா மற்றும் அரவிந்த் தேஷ்பாண்டே உள்ளிட்டோருடன் இணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

அவரது மறைவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மறைந்த லாகூவுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், மராட்டிய திரையுலகம் 'நாட்சாம்ராட்'டை (நடிகர்களின் அரசர்) இழந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்