கேரளாவில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்: மாணவிகள் 2 பேர் காயம்

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2019-12-18 10:57 GMT
திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூரில்  உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பு  சார்பில் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக கருத்தரங்கம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இடதுசாரி எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி வளாகத்திற்குள் கருத்தரங்கை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து கல்லூரி வளாகத்துக்கு வெளியே சாலையோரத்தில் கருத்தரங்கை நடத்த நடவடிக்கை மேற்கொண்ட போது மோதல் வெடித்தது. ஏபிவிபி மாணவர் ஒருவரை கும்பலாக சேர்ந்து எஸ்.எஃப்.ஐ மாணவர் அமைப்பினர் விரட்டி விரட்டி தாக்கினர்.

இந்த தாக்குதலில் ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த ஒருவரும் தாக்குதலை தடுக்க முயன்ற இரண்டு பேரும் காயம் அடைந்தனர். மேலும் மாணவிகள் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த மாணவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக  போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாங்கள் அந்த மருத்துவமனைகளுக்குச் சென்று அவர்களின் அறிக்கையை பெற உள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்