என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை: தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு

தெலுங்கானாவில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட 4 பேர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-21 10:04 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற 4 பேரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். 4 பேரின் உடல்களையும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மெகபூப்நகரை சேர்ந்த 25 வயது பெண் டாக்டர் 4 பேரால் கற்பழித்து, எரித்து கொல்லப்பட்டார். அவரது உடல் சத்தன்பள்ளி என்ற இடத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது.

நவம்பர் 29-ந்தேதி போலீசார் இந்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக லாரி ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர். கடந்த 6-ந் தேதி 4 பேரையும் நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரின் துப்பாக்கியை பறித்து சுட்டதாகவும், கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

அன்றைய தினமே அவர்களது உடல்கள் மெகபூப்நகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 4 பேரை சுட்டுக்கொன்றதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போலி என்கவுண்ட்டர், இந்த பிரச்சினையில் கோர்ட்டு தலையிட வேண்டும் என்று கூறி தெலுங்கானா ஐகோர்ட்டிலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதேசமயம் சுப்ரீம் கோர்ட்டும் இந்த என்கவுண்ட்டர் குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேர் கமிஷனை அமைத்தது. தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது.

என்கவுண்ட்டருக்கு எதிரான மனு மீது விசாரணை நடத்திய தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான் தலைமையிலான அமர்வு, 4 குற்றவாளிகளின் உடல்களையும் ஆஸ்பத்திரியிலேயே பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டது. அதன்படி 4 பேரின் உடல்களும் ஐதராபாத் அரசு காந்தி ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான் நேற்று சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் விவரம் வருமாறு:-

4 குற்றவாளிகளின் உடல்களையும் இரண்டாவதாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் 3 தடயவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும். மறு பிரேத பரிசோதனையை 23-ந்தேதிக் குள் (திங்கட்கிழமை) நடத்தி, அறிக்கையை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் 4 பேரின் உடல்களையும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் தாங்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் சுயேச்சையான, சுதந்திரமான கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவின் தலைவர், வழக்கு டைரி, போலீஸ் அதிகாரிகளின் பணிகள் பற்றிய பதிவேடு, போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகளின் பட்டியல் உள்பட என்கவுண்ட்டர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கைப்பற்ற வேண்டும். அவற்றை தேவைப்படும்போது சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள கமிஷனிடம் ஒப்படைக்க வேண்டும்.

எய்ம்ஸ் டாக்டர்கள் விமானத்தில் வந்து செல்வதற்கும், அவர்கள் தங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்