டெல்லியில் மீண்டும் பயங்கரம்: ஜவுளி குடோனில் தீ விபத்து; 9 பேர் சாவு

டெல்லியில் ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

Update: 2019-12-23 12:15 GMT
புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் ஜான்சிராணி சாலையில் உள்ள அனஜ் மண்டி பகுதியில் இருந்த 4 மாடி கட்டிடம் ஒன்றில் கடந்த 8-ந்தேதி திடீரென தீப்பிடித்தது. இதில் 43 பேர் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தின் சோக வடுக்கள் மறைவதற்குள் தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு துயர சம்பவம் டெல்லியில் நடந்து உள்ளது. அங்குள்ள பிறேம்நகர் கிராரி பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. குறுகலான வீதியில் அமைந்திருந்த அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஜவுளி குடோனும், மீதமுள்ள தளங்களில் குடியிருப்புகளும் இருந்தன.

இந்த ஜவுளி குடோனில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பிற தளங்களிலும் வேகமாக பரவியது. இதில் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியது. இதில் கட்டிடத்தின் ஒரு பகுதியும் இடிந்தது.

தீ விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். எனவே அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் அவர்கள் தீயில் சிக்கி மரண ஓலம் எழுப்பினர்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் 10 வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் உடனடியாக செயல்பட்டு தீயணைக்கும் பணிகளை தொடங்கினர். இதனால் நேற்று விடியற்காலை 3.50 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்த கொடூர விபத்தில் தீயில் கருகியும், மூச்சுத்திணறியும் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இந்த சம்பவத்தில் தீயில் கருகி 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

9 பேரை பலி வாங்கிய இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. எனினும் தரைத்தளத்தில் இருந்த ஜவுளி குடோனில் ஏற்பட்ட மின் கசிவால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விபத்து குறித்து நீதி விசாரணைக்கும் மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்