‘சாதாரண மக்களை பாதிக்கும்’ ரெயில் கட்டணம் உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

கியாஸ் சிலிண்டர் விலை மற்றும் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Update: 2020-01-02 01:02 GMT
புதுடெல்லி, 

சாதாரண, எக்ஸ்பிரஸ், குளிர்சாதன ரெயில்களில், அவற்றின் வகுப்புகளின் அடிப்படையில் பயணிகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதில் கிலோ மீட்டருக்கு 1 காசு முதல் 4 காசுகள் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல கியாஸ் சிலிண்டர் விலையும் சிலிண்டருக்கு ரூ.19 உயர்ந்துள்ளது.

இந்த கட்டண உயர்வு பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கட்டண உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், ‘இந்த விலை உயர்வு சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். இது, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். சாதாரண மக்களுக்கு வழங்கப்பட்ட நியாயமான புத்தாண்டு பரிசா இது?’ என கேள்வி எழுப்பினார். நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் நிலையில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் தளத்தில், ‘மோடி அரசு புதிய ஆண்டை தொடங்கி இருக்கிறது. ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரம் மீது மற்றொரு தாக்குதல் (கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு) நடந்திருக்கிறது. வேலையிழப்பு, உணவுப்பொருள் பணவீக்கம், கிராமப்புற வருவாய் இழப்பு போன்றவற்றின் மத்தியில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மோடி அரசின் புத்தாண்டு பரிசு இது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்