மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு
மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
இந்தூர்,
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, பா.ஜனதா தொண்டர்களை துன்புறுத்துவதாக அந்த கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு அதிகாரிகள் பா.ஜனதாவினர் மீது பாகுபாடு காட்டுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் விஜய் வர்கியா குற்றம் சாட்டி வருகிறார்.
எனவே அரசு அதிகாரிகளை கண்டித்து தனது சொந்த ஊரான இந்தூரில் அவர் கடந்த 3-ந்தேதி போராட்டம் நடத்தினார். இதில் பேசிய அவர், அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
அவர் கூறுகையில், ‘அரசு அதிகாரிகளை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம் என எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தும் அவர்கள் மறுத்து விட்டனர். தாங்கள் வெளியே சென்றிருக்கிறோம் என்பதை கூட அவர்கள் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. இதை பொறுக்க முடியாது. எங்கள் சங் (ஆர்.எஸ்.எஸ்.) பரிவார தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள். இல்லையென்றால் இன்று நாங்கள் இந்தூரை கொளுத்தியிருப்போம்’ என்று கூறினார்.
இந்த வீடியோ பதிவு மாநிலம் முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து விஜய் வர்கியா மற்றும் பா.ஜனதா எம்.பி. சங்கர் லால்வானி உள்பட 350 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.