இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்கள் கொள்முதல்

இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்கள் வாங்கப்படுவதாக பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் தெரிவித்தார்.

Update: 2020-01-12 22:45 GMT
கொல்கத்தா,

கொல்கத்தாவில் இந்திய கடலோர காவல் படைக்கு கப்பல்களை சேர்க்கும் விழா, நேற்று நடந்தது. இந்த விழாவின் இடையே மத்திய பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய விமானப்படைக்கு ஏறத்தாழ 200 போர் விமானங்களை வாங்குகிறோம். இதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன.

83 இலகு ரக தாக்குதல் விமானங்களை (மார்க் 1 ஏ) வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் உள்ளது. இந்தியாவின் அவசர தேவையை சமாளிப்பதற்காக இந்த அதிநவீன போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன.

இதற்கான ஒப்பந்தம், இந்த ஆண்டு நிச்சயமாக கையெழுத்தாகி விடும். இதை விரைவாக நடத்தி முடிக்க நாங்கள் விரும்புகிறோம்.

வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு, அரசு நடத்தும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 8 முதல் 16 இலகு ரக தாக்குதல் விமானங்களை தயாரிக்க தொடங்கும்.

தேவைப்பட்டால் வெளிச்சேவை மூலம் அவற்றை மேலும் அதிநவீனமயமாக்குவோம்.

மேலும் 110 விமானங்களை வாங்கவும் நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்