கூடுதல் வரியாக வசூலான ரூ.3 லட்சம் கோடியை மத்திய அரசு பயன்படுத்தவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசு 5 ஆண்டுகளில் கூடுதல் வரியாக வசூலான ரூ.3½ லட்சம் கோடியை பயன்படுத்த தவறிவிட்டது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Update: 2020-01-13 22:45 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

2014-2015 முதல் 2019-2020 நிதி ஆண்டு வரை கூடுதல் வரியாக வசூலான ரூ.3.59 லட்சம் கோடியை மோடி அரசு பயன்படுத்த தவறிவிட்டது. இது நிதி குழப்பத்தின் அதிர்ச்சி தகவலாக உள்ளது. இது நிதியை பயன்படுத்த இயலாமையா? அல்லது நிதியை பயன்படுத்தும் திறமையின்மையா?

நியாயமான கல்வி கட்டணம் கேட்ட மாணவர்களை மோடி அரசு தாக்குகிறது, தடியடி நடத்துகிறது, கண்ணீர்புகை குண்டுகளை வீசுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற மறுக்கிறது. ஆனாலும் அதே 5 நிதி ஆண்டுகளில் வசூலான உயர்கல்வி கூடுதல் வரி ரூ.49,101 கோடியை பயன்படுத்த தவறிவிட்டது.

இந்தியா காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறி வருகிறது. டெல்லி உள்பட பல நகரங்கள் ஆக்சிஜன் விற்பனை செய்யப்படும் இடங்களாக மாறிவருகிறது. நாட்டில் 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாக மாசு உள்ளது. ஆனாலும் மோடி அரசு 5 நிதி ஆண்டுகளில் வசூலான தூய்மையான எரிசக்தி கூடுதல் வரி ரூ.38,943 கோடியை பயன்படுத்தாமல் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உச்சத்துக்கு சென்றுள்ளது. விலைவாசி தினமும் உயர்ந்துகொண்டே செல்வதால் விவசாயிகள், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் மத்திய அரசு கச்சா எண்ணெய் கூடுதல் வரி ரூ.74,162 கோடியை பயன்படுத்த தவறிவிட்டது. ஏன்? இதற்கு பின்னணியில் உள்ள காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்