3 அமைச்சகங்களில் உள்ள ரூ.24 ஆயிரம் கோடி திட்டங்கள் தாமதமானது குறித்து பிரதமர் மோடி ஆய்வு

3 மத்திய அமைச்சகங்களில் உள்ள ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 திட்டங்கள் தாமதமானது குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

Update: 2020-01-22 23:30 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு சிறந்த நிர்வாகத்துக்கும், திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றுவதற்கும், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் ‘பிரகதி’ என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதில் பல மாநில அரசுகளும் இணைந்துள்ளன.

32-வது பிரகதி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி ரெயில்வே அமைச்சகத்தின் 3 திட்டங்கள், சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் 5 திட்டங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஒரு திட்டம் என மொத்தம் 9 திட்டங்கள் தாமதமானது குறித்து ஆய்வு செய்தார்.

இந்த திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.24 ஆயிரம் கோடி. இவை கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்பட 9 மாநிலங்களில் நிறைவேற்றப்பட வேண்டியவை.

இதுதவிர பிரதம மந்திரியின் காப்பீடு திட்டங்களான ஜீவன் ஜோதி, சுரக்‌ஷா ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். குற்றம் மற்றும் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். 17 பல்வேறு துறைகளில் உள்ள 47 அரசு திட்டங்களில் குறைகளை தீர்ப்பது தொடர்பாகவும் அவர் ஆய்வு செய்தார்.

31-வது பிரகதி கூட்டத்தில் பிரதமர் மோடி மொத்தம் ரூ.12.30 லட்சம் கோடி மதிப்பிலான 269 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்