நித்யானந்தா ஜாமீனை ரத்து செய்ய மனு: கர்நாடக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

நித்யானந்தா ஜாமீனை ரத்து செய்ய மனு அளித்துள்ளது குறித்து கர்நாடக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-24 21:02 GMT
பெங்களூரு,

நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் பெங்களூரு அருகே உள்ள பிடதியில் அமைந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு அந்த பீடத்தில் நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அவரது முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் என்பவர் செக்ஸ் புகார் கூறினார். அதன் பேரில் ராமநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் நித்யானந்தாவை கைது செய்து 50 நாட்களுக்கு மேல் சிறையில் அடைத்திருந்தனர். அவருக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் வெளியே வந்தார். நித்யானந்தா மீதான வழக்கு விசாரணை ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் ராமநகர் கோர்ட்டு உத்தரவிட்டது. பலமுறை உத்தரவிட்டும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நித்யானந்தாவின் முன்னாள் சீடர்கள் லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்திராவ் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், செக்ஸ் புகார் வழக்கில் ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக நித்யானந்தா நேரில் ஆஜராகவில்லை என்றும், அதனால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி குன்கா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில், நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்வது குறித்து ஒருவாரத்தில் பதிலளிக்கும்படி கர்நாடக அரசு மற்றும் நித்யானந்தா தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதற்கிடையே வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நித்யானந்தாவை கண்டு பிடித்து கைது செய்ய ‘புளு கார்னர்’ நோட்டீசை குஜராத் கோர்ட்டு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்