உத்தர பிரதேசத்தில் 23 ‌குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபர் சுட்டுக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

Update: 2020-01-31 03:10 GMT
லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள கசாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் பாதம். இவர் ஒரு கொலை வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கிராமத்து சிறுவர்கள் உள்ளிட்ட சிலரை வீட்டுக்கு அழைத்துள்ளார். 

அதன்படி மாலையில் பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த 15 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் வீட்டிலேயே சிறைபிடித்தார் பாதம். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். 

ஆனால், காவல்துறையினரைப் பார்த்ததும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார் சுபாஷ் பாதம். இதில் 2 காவலர்களும், கிராமவாசி ‌ஒருவரும் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், சுபாஷ் பாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் மூலமாக 8 மணி நேர நீண்ட மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்ததோடு, 23 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்ட‌னர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், சுபாஷ் பாதம் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குழந்தைகளை பத்திரமாக மீட்ட காவல்துறைக்கு, உத்தரப்பிரதேச மாநில அரசு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்