அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது - பிரதமர் மோடி அறிவிப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

Update: 2020-02-05 06:28 GMT
புதுடெல்லி

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மக்களவையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது:- 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது.  அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா சுதந்திரமாக செயல்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். அயோத்தியில் விரைவில் ராமல் கோவில் கட்டும் பணி தொடங்கும். 

அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபடி சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்க உத்தரபிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அயோத்தியில் ஒரு பெரிய ராமர் கோவில் கட்டுவதற்கு நாம் அனைவரும் ஆதரவளிப்போம் என கூறினார்.

மேலும் செய்திகள்