எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் மேலும் 10 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு

அதிருப்தி எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில் கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

Update: 2020-02-06 06:45 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு அமைந்தது. இந்த கூட்டணி அரசு 14 மாதங்கள் ஆட்சி நடத்தியது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. அந்த இரு கட்சிகள் பிறப்பித்த கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பிறகு சட்டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு கடந்த ஆண்டு(2019) டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த 12 பேரில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள். இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, பிரசாரத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவடைந்து 50 நாட்களுக்கு பிறகு மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய எடியூரப்பா முடிவு செய்தார். இதன்படி மந்திரிசபை விஸ்தரிப்பு இன்று செய்யப்பட்டது. கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற விழாவில் 10 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். புதிய மந்திரிகளாக பதவியேற்றவர்களில்  8 பேர் காங்கிரஸ் , மற்றும் 2 பேர் மஜத கட்சியில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்