பிரிவினைவாத தலைவர் உடல்நிலை குறித்த வதந்தி; காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்

பிரிவினைவாத தலைவர் உடல்நிலை குறித்த வதந்திகளைத் தொடர்ந்து காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-02-13 05:05 GMT
ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த  ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.  ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும்  பிரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து  வதந்திகள் பரவி வன்முறை ஏற்படக்கூடாது என்பதற்காக ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதள சேவைகள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவை முடக்கப்பட்டன. சமீபத்தில் தான்  படிப்படியாக  இணையதள சேவைகள், தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் இணைய தள சேவை  முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர்  சையத் அலி ஷா ஜீலானியின் உடல்நலம் குறித்த வதந்திகள் பரவியது. 90 வயதான ஜீலானியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சில சமூக ஊடக பதிவுகளில் வதந்தி பரவியது. இதையடுத்து புதன்கிழமை இரவு   இணைய தள சேவைகள், மொபைல் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றவாளிகள் எந்தவொரு கலவரத்திலும் ஈடுபடாமல்  தடுக்கவும் காஷ்மீரில் பதற்றம் நிறைந்த  பகுதிகளில் போதுமான அளவு பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

ஜீலானி  சில ஆண்டுகளாக  உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார் ஆனால் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என  அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்