பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் ; கர்நாடக அரசியலில் பரபரப்பு

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10-க்கும் மேற்பட்டோர் பெங்களூருவில் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் ரகசிய கூட்டத்தை நடத்தினர்.

Update: 2020-02-19 01:08 GMT
பெங்களூரு,

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10-க்கும் மேற்பட்டோர் பெங்களூருவில் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் ரகசிய கூட்டத்தை நடத்தினர்.

கர்நாடக மந்திரிசபை கடந்த 6-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்த 10 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அப்போது பா.ஜனதாவை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, சி.பி.யோகேஷ்வர் ஆகியோருக்கும் மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சி.பி.யோகேஷ் வருக்கு மந்திரி பதவி வழங்கும் முடிவுக்கு எதிராக பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்கும் நிலை உருவானது.

இதனால் கடைசி நேரத்தில் அந்த 3 பேருக்கும் மந்திரி பதவி வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் மூத்த எம்.எல்.ஏ.வான உமேஷ்கட்டி கடும் அதிருப்தியில் உள்ளார். அவர் சமீபத்தில் டெல்லிக்கு சென்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் ரகசிய கூட்டம் நடைபெற்று உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ஜனதாவை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, ராஜூகவுடா, ஏ.எஸ்.பட்டீல், பசனகவுடா பட்டீல் யத்னாள் உள்ளிட்ட 10-க்கும் ேமற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பா.ஜனதாவில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

எடியூரப்பாவுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகார் அளிப்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த ரகசிய கூட்டம் குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி எடியூரப்பா அதிர்ச்சி அடைந்து உள்ளார். மேலும் உளவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்த ரகசிய கூட்டம் குறித்து தனக்கு தகவல் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி கேட்டு கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் ரகசிய கூட்டம் குறித்து ஜெகதீஷ்ஷெட்டர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘‘மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் இந்த கூட்டம் நடத்தவில்லை. அவர்கள் தங்களின் மாவட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்க என்னிடம் வந்தனர். மந்திரி பதவி குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை. எடியூரப்பாவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் ஆலோசிக்கவில்லை. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது எனது வீட்டுக்கு வந்து பேசிவிட்டு செல்கிறார்கள். அதேபோல் தான் தற்போதும் வந்தனர். மந்திரி பதவி வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. உளவுப்பிரிவு இதுகுறித்து எடியூரப்பாவுக்கு தகவல் அளித்ததா? என்று தெரியவில்லை. எங்கள் கட்சியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’’ என்றார்.

இதற்கிடையே தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் நடத்திய தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை தொடர்பு கொண்டு நேரில் வந்து சந்திக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் எடியூரப்பாவை பெங்களூருவில் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று காலை சந்தித்து பேசினார். அப்போது மந்திரிகள் பசவராஜ் பொம்மை, சோமண்ணா, ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். ரகசிய கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்று எடியூரப்பா கேட்டதாக ெதரிகிறது.

அதற்கு ஜெகதீஷ் ஷெட்டர், ‘‘வட கர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், என்னை சந்தித்து, மந்திரி பதவி கிடைக்காதது குறித்தும், கட்சிக்கு புதிதாக வந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது குறித்தும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறிப்பாக உமேஷ்கட்டி எம்.எல்.ஏ., 2 முறை வெற்றி பெற்றவர்களுக்கு மந்திரி பதவி வழங்கியிருப்பதாகவும், தனக்கு பதவி வழங்கவில்லை என்றும் கூறி அதிருப்தியில் உள்ளார். அவரை சரிசெய்ய நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியதாக தெரிகிறது.

அதற்கு எடியூரப்பா, கட்சி எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு ரகசியமாக கூட்டம் நடத்துவது சரியல்ல என்றும், இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் நடத்தியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்