ஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்

ஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

Update: 2020-02-25 19:24 GMT
புதுடெல்லி,

பணியாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின்கீழ், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளும் வசதி, முன்பு அமலில் இருந்தது. அப்படி எடுப்பவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகை குறைத்து தரப்படும். இப்படி 15 ஆண்டுகளுக்கு குறைவான ஓய்வூதியம் பெற்ற பிறகு, அவர்கள் முழு ஓய்வூதியம் பெறலாம்.

இந்த வசதியை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு வாபஸ் பெற்றது. இதற்கிடையே, தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதிக்கு முன்பு இத்திட்டத்தை தேர்வு செய்தவர்களுக்கு இதை மீண்டும் அமல்படுத்துவது என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்தது.

இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கடந்த 20-ந்தேதி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த முடிவு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 2008-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதிக்கு முன்பு, இந்த வசதியை தேர்வு செய்த 6 லட்சத்து 30 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள். அவர்கள் திட்டத்தில் சேர்ந்த 15 ஆண்டுகள் முடிவடைந்தவுடன், முழு ஓய்வூதியம் பெறுவார்கள்.

மேலும் செய்திகள்