கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: சுப்ரீம் கோர்ட்டில் நாளை முதல் 6 அமர்வுகளில் மட்டும் விசாரணை

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, சுப்ரீம் கோர்ட்டில் நாளை முதல் 6 அமர்வுகளில் மட்டும் விசாரணை நடைபெற உள்ளது.

Update: 2020-03-14 23:15 GMT
புதுடெல்லி,

 உலகை மிரட்டி வரும் கொரோனா உயிர்க்கொல்லி நோய் தற்போது இந்தியாவிலும் தடம் பதித்து உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டிலும் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கோர்ட்டில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி போப்டே வீட்டில் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடந்தது.

அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட்டு ஓரு சுற்றறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் ‘சுப்ரீம் கோர்ட்டில் தேவையில்லாமல் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வழக்கு தொடர்புடைய வக்கீல்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள் மட்டும் வரவேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 15 அமர்வுகளில் 6 அமர்வுகள் மட்டுமே நாளை (திங்கட்கிழமை) முதல் மறு உத்தரவு வரும்வரை செயல்படும். அதில் அவசர வழக்குகள் 12 மட்டும் தினசரி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். கோர்ட்டு ஊழியர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே கோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கோர்ட்டு கேன்டீன்கள் மறு உத்தரவு வரும்வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்