‘கொரோனா பரவுவதை தடுக்க கூடுதல் நடவடிக்கை தேவை’ - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள்

கொரோனா பரவுவதை தடுக்க கூடுதல் நடவடிக்கை தேவை என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-15 22:15 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்து இருந்தாலும், வைரசை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுப்பது பற்றி மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகள் அனைத்தும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குபவர்களின் எண்ணிக்கை 31-ல் இருந்து 84 ஆக ஒரே வாரத்தில் அதிகரித்து உள்ளது. சில மாநிலங்கள் பகுதியாக கடை அடைப்புகளை அறிவித்து உள்ளன. எனவே மத்திய அரசானது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கூடுதலாக நடவடிக்கைகள் எடுப்பது பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. வைரஸ் தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். 30 நாட்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு 3-ம் கட்டத்துக்கு வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்