கொரோனா அச்சம் : தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட மத்திய அமைச்சர்

கொரோனா அச்சம் காரணமாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

Update: 2020-03-17 06:14 GMT

புதுடெல்லி

கொரோனா அச்சம் காரணமாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே  தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

 கேரளாவின் ஸ்ரீ சித்ரா திருனல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SCTIMST) நோயாளிகளை கவனித்து வந்த மருத்துவர் ஒருவர்   சமீபத்தில் ஸ்பெயினிலிருந்து திரும்பி வந்துள்ள நிலையில் சமீபத்தில் அவருக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து மருத்துவரின் உடன் பணிபுரிந்த அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் வெள்ளமுள்ளி  முரளிதரன் அரசுமுறை பணிக்காக இந்த மருத்துவமனைக்கு கடந்த 14-ஆம் தேதி சென்றதாக தெரிகிறது. இதன் காரணமாக முரளிதரனுக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்படுமா? இல்லையா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதை தொடர்ந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவக்கூடாது என்ற அடிப்படையில்  அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டார்.

கடந்த சில நாட்களாக அவர் நாடாளுமன்றம் வரவில்லை. நாடாளுமன்ற அலுவல்களில் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் இருந்தே அலுவல்களை கவனித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிந்த பின்னரே வெளியில் வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்