உல்லாச பயணம்; விபத்தில் சிக்கிய கொரோனா நோயாளியால் 40 பேருக்கு சிக்கல்

கேரளாவில் கொரோனா பாதிப்பு சோதனையில் இருந்து தப்பி ஓடி விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய 40 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Update: 2020-03-17 11:39 GMT
கொல்லம்,

கேரளாவின் கொல்லம் நகரில் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், அந்த நபர் பரிசோதனையை தொடர்ச்சியாக மேற்கொள்ளாமல் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தெரியாமல் அவர்களின் பிடியில் இருந்து இடையிலேயே தப்பி ஓடியுள்ளார்.  பின்னர் காரில் சென்ற அந்த நபர் சாலை விபத்தொன்றில் சிக்கியுள்ளார்.

அவரை சுற்றியிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் அந்நபரை மீட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.  இதில் கொல்லம் மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு பல்வேறு ஸ்கேன் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதன்பின்னரே அவரது குடும்பத்தினர், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நபர் என்ற உண்மையை தெரிவித்து உள்ளனர்.

இதனை அடுத்து இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள், பணியாளர்கள், ஒரு போலீஸ்காரர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உள்பட 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.  கொரோனா நோயாளியை ஐ.சி.யு. பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அந்நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் 40 பேரும் தொடர்ந்து 14 நாட்கள் வரை தனி வார்டில் தங்க வைக்கப்படுவார்கள்.

மேலும் செய்திகள்