நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனைவி விவாகரத்து கேட்ட வழக்கு வரும் 24ந்தேதிக்கு விசாரணை

நிர்பயா வழக்கு குற்றவாளி அக்ஷயின் மனைவி விவாகரத்து கேட்ட வழக்கு விசாரணை வரும் 24ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-03-19 09:18 GMT
அவுரங்காபாத்,

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.  சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.

அவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது பல முறை தள்ளி போனது.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ந்தேதி காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.

இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் தாகுரின் மனைவி புனிதா தேவி.  இவர் பீகாரின் அவுரங்காபாத் நகரில் நபிநகர் பகுதியில் வசித்து வருகிறார்.  இந்நிலையில், அவர் பீகார் குடும்ப நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றி அவரது வழக்கறிஞர் முகேஷ் குமார் சிங் கூறும்பொழுது, பாலியல் குற்றத்தில் கணவர் ஈடுபட்டார் என கூறி பெண் ஒருவர் விவாகரத்து கோர சட்டத்தில் ஒரு பிரிவு உள்ளது என கூறியுள்ளார்.

நிர்பயா வழக்கில் தனது கணவர் ஒன்றுமறியாதவர் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என தவறாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என்றும் சமீப காலம்வரை அக்ஷயின் மனைவி கூறி வந்த நிலையில், ஒரு கற்பழிப்பு குற்றவாளியின் விதவை என்ற பெயரோடு வாழ விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

வரும் 20ந்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள சூழலில், தண்டனையை காலதாமதப்படுத்தும் ஒரு பகுதியாக, இந்த விவாகரத்து மனு மற்றொரு திட்டமிடலாக இருக்க கூடும் என்றும் கூறப்பட்டது.

இந்த மனு மீது பீகார் குடும்ப நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.  இதில், புனிதா தேவியின் வழக்கறிஞர் ஆஜராகி கூறும்பொழுது, தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் கடைசியாக அக்ஷயை சந்திப்பதற்காக அவரது மனைவி டெல்லி சென்றுள்ளார்.

அக்ஷயின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் இறுதி சடங்குகளை முடித்து விட்டு அவர் திரும்புவார் என கூறியுள்ளார்.  இதனை அடுத்து, மனு செய்தவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டியது அவசியம் என்பது கவனத்தில் கொள்ளப்படுகிறது.  அதனால் இந்த வழக்கை வரும் 24ந்தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என நீதிபதிகள் கூறினர்.

மேலும் செய்திகள்