டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் வெளிமாநில தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டுள்ளனர்.

Update: 2020-03-29 02:19 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக  பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் மட்டுமே கிடைக்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவால், வெளிமாநிலங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். வேலை இல்லாத காரணத்தால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்றுக்கணக்கான கி.மீட்டர்கள் நடந்தே  செல்லும் செய்திகள் கடந்த சில நாட்களாக வெளி வந்தன. 

இதையடுத்து, தங்கள் மாநில தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்கு சுமார் ஆயிரம் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இதையடுத்து, டெல்லியில் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருக்கின்றனர். முகக்கவசம் மற்றும் கைக்குட்டைகளை முகத்தில் கட்டிக்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர்.  போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுக் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று காலையில் தொழிலாளர்களை அழைத்து வர 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்திருப்பதாக உத்தரப்பிரதேச அரசும், 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது.  தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில்  900-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகளவில் பாதிப்பு 5 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 

மேலும் செய்திகள்