உத்தரபிரதேச மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு - புதிய சர்ச்சை

உத்தரபிரதேச மாநிலத்தில் ஊடரங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளர்கள் மீது ரசாயனம் கலந்த கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இது புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

Update: 2020-03-31 00:14 GMT
லக்னோ, 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கிற வகையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்து, நகரங்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் மூடலால் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.

பஸ், ரெயில்கள் ஓடாததால் பலரும் சொந்த ஊருக்கு கால் நடையாக நடந்து செல்லும் அவலங்கள் நேர்ந்ததை ஊடகங்கள் படம் பிடித்து காட்டின.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரான பரேலிக்கு சிறப்பு பஸ்கள் மூலம் திரும்பினர்.

ஆனால் அப்படி திரும்பிய குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை சாலையில் அமர வைத்து அவர்கள் மீது ரசாயனம் கலந்த கிருமி நாசினியை தெளித்தனர்.

இப்படி கிருமி நாசினி தெளிக்கப்பட்டதில் பல பெண் களும், குழந்தைகளும் தங்கள் கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் செய்தனர். இது ஊடகங்களில் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரியும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், டுவிட்டரில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நிர்வாகத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்து வேலை செய்துவிட்டு ஊர் திரும்பியுள்ள தொழிலாளர்கள் மீது ரசாயனத்தை தெளித்து தூய்மைப்படுத்துவது சில கேள்விகளை எழுப்பி உள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம், ஏதாவது வழிமுறைகளை வகுத்து அளித்துள்ளதா?

ரசாயனத்தால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதற்கு எப்படி சிகிச்சை அளிப்பீர்கள்? அவர்களது ஈர உடைகளை மாற்றுவதற்கு என்ன ஏற்பாடு செய்தீர்கள்? ரசாயன தெளிப்பால் ஈரமான உணவுக்கு என்ன உணவு மாற்றாக வழங்கப்பட்டது?

இவ்வாறு அகிலேஷ் யாதவ் கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பான ஊடக செய்திகளையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் காப்பு கமிஷன் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

பரேலியில் ஊர் திரும்பிய குழந்தைகள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மீது வலுக்கட்டாயமாக ரசாயனம் கலந்த கிருமிநாசினி தெளிக்கப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் தொடர்பாக 3 நாளில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் காப்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மிகுந்த கவலை தெரிவித்துள்ள கமிஷன், இப்படி கிருமி நாசினி தெளிப்பதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் பரேலி மாவட்ட நிர்வாகம் நடந்த தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் நிதிஷ் குமார் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பரேலி மாநகராட்சி ஊழியர்களையும், தீயணைப்பு படையினரையும் தொழிலாளர்கள் வந்த பஸ்களுக்குள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யுமாறு கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அளவுக்கு மீறி செயல்பட்டு விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்” என கூறி உள்ளார்.

இந்த சம்பவம், உத்தரபிரதேசத்தில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்