ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்; பிரதமருக்கு, தெலுங்கானா முதல்-மந்திரி கோரிக்கை

“கொரோனாவை எதிர்த்துப் போரிட நம்மிடம் வேறு ஆயுதம் இல்லை. எனவே ஊரடங்கை தயக்கம் காட்டாமல் நீட்டியுங்கள்” என்று பிரதமருக்கு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

Update: 2020-04-08 02:17 GMT
ஐதராபாத், 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி வருகிற 14-ந் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:-

தேசிய ஊரடங்கை ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகும் நீட்டிக்க ஆதரவு தெரிவிக்கிறேன். ஏனென்றால் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்டுவிட முடியும். மனித உயிர்களை மீட்க முடியாது. பிரதமருக்கு இதை கோரிக்கையாகத் தெரிவிக்கிறேன். 

ஊரடங்கை நீட்டிக்க தயக்கம் காட்ட வேண்டாம். இதுகுறித்து நாட்டில் அனைத்து தரப்பினரிடமும், எல்லா முதல்-மந்திரிகளிடமும் காணொலி காட்சிகள் மூலம் ஆலோசனை செய்யுங்கள். கொரோனா வைரசை எதிர்த்து போரிட நம்மிடம் ஊரடங்கைத் தவிர வேறு ஆயுதம் இல்லை.இவ்வாறு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கூறி இருக்கிறார்.

மேலும் செய்திகள்