ஊரடங்கை மீறி நண்பரின் கடைக்கு ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்பி ‘போதை பாக்கு’ வாங்கிய இளைஞர் - போலீசார் கைது செய்தனர்

ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்பி, நண்பரின் கடையில் ‘போதை பாக்கு’ வரவழைத்த ஒரு இளைஞரையும் அவருடைய நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-04-13 20:02 GMT
ராஜ்கோட், 

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள மோர்பி நகரைச் சேர்ந்தவர், ரவி பதானியா (வயது 26). போதை பாக்குக்கு அடிமையானவர். அங்கு உள்ள நீலகந்த் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ஊரடங்கு அமலில் இருப்பதால் மது மற்றும் புகையிலைகள் விற்கும் கடைகள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன.

ரவி பதானியாவின் நண்பர் கிரன் கர்தாரியா என்பவர் அருகில் வெற்றிலை பாக்கு கடை வைத்து இருக்கிறார். அவரது கடைக்கும் இவரது அடுக்குமாடி குடியிருப்புக்கும் 100 மீட்டர் தொலைவு இருக்கும். சிகரெட், புகையிலை, பீடா போன்றவற்றை விற்பனை செய்து வரும் அவர், ஊரடங்கு காரணமாக கடையைத் திறக்கவில்லை.

ரவி பதானியாவுக்கு போதை பாக்கு தேவைப்பட்டது. இதை நண்பருக்கு தெரிவித்தார். தன்னிடம் இருக்கும் ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்புவதாகவும், அதன் மூலம் பாக்கை தனக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி தனது அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்தபடி அந்த விமானத்தை இயக்கினார். அது பறந்து சென்று அவருடைய நண்பரின் கடை அருகே சென்றது.

திட்டமிட்டபடி ஒரு சிறிய பையில் போதை பாக்கை அடைத்து, அதை விமானத்தில் கட்டிவிட்டார். அந்த குட்டி விமானம் அதை சுமந்துகொண்டு ரவி பதனியா மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தது. அத்துடன் அவர்களது விளையாட்டை நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டனர். அது ‘வைரல்’ ஆனது.

அதை அறிந்த போலீசார் உஷார் அடைந்தார்கள். ஊரடங்கை மீறி தடை செய்யப்பட்ட போதை பாக்கை பரிமாறிய குற்றத்திற்காக ரவி பதானியா, கிரன் கர்தாரியா ஆகிய இரு நண்பர்களையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்