மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைக்கப்படவில்லை - நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைக்கப்படவில்லை என்று மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-19 15:31 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. ஓய்வூதியங்களைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்ட தகவல் பரவியதை தொடர்ந்து நிதி அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “மத்திய அரசின் ஓய்வூதியத்தில் 20 சதவிகிதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி தவறானது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வழங்கலில் குறைப்பு இருக்காது. அரசாங்க பண மேலாண்மை அறிவுறுத்தல்களால் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த டுவிட்டர் பதிவை பகிர்ந்து கொண்ட நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன், முன்னர் தெளிவுபடுத்தப்பட்டபடி, ஓய்வூதியத்தைக் குறைப்பதற்கான அத்தகைய முன்மொழிவு எதுவும் இல்லை. இதுபோன்ற வதந்திகளை நம்பக்கூடாது. இந்த விஷயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தால் சிந்திக்கப்படவில்லை என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. மாறாக, ஓய்வூதியதாரர்களின் நலனுக்கும் நல்வாழ்விற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்