சரக்கு ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் பலி "மிகுந்த வேதனையளிக்கிறது" - பிரதமர் மோடி

சரக்கு ரெயில் மோதி 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-05-08 04:44 GMT
புதுடெல்லி

மராட்டிய மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்த மத்திய பிரதேச தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி ரெயில் தண்டவாள பாதையில் நடந்து சென்றுள்ளனர். 
 
ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்த ரெயிலும் வராது என்று நினைத்த, தொழிலாளர்கள்   வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் நேற்று இரவில் கர்மத் அருகே தண்டவாளத்திலேலே படுத்து தூங்கி உள்ளனர். இன்று அதிகாலையில் சரக்கு ரெயில் வந்தபோது அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் அவர்கள் மீது  ரெயில் மோதி கோர விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த விபத்தில்  குழந்தைகள் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவுரங்காபாத்தில் சரக்கு ரெயில் மோதி  16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்ததில் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் "மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் ரெயில் விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. ரெயில்வே அமைச்சர்  பியூஷ் கோயலுடன் பேசியுள்ளேன், அவர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று பிரதமர் டுவீட் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்