பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை

பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

Update: 2020-05-12 06:57 GMT
புதுடெல்லி,

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால் 45 நாட்களுக்கு மேலாகியும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கையொட்டி விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரவல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு பின்னர் 5-வது தடவையாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது, ஊரடங்குக்கு பின் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்துக்கு வருகிற 31-ந் தேதி வரை ரெயில், விமான சேவைகளை தொடங்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். இதேபோல் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஆகியோரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.  உலக செவிலியர்கள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஊரடங்கு பற்றிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி வெளியிட கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்