கொரோனா முகாமில் அட்டகாசம்: பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்திய சம்பவம்

பீகாரில் கொரோனா முகாமில் பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-05-20 09:50 GMT
பாட்னா

நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாடு  முழுவதும் 4-வது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அத்தியவாசிய தேவைக்கு மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். 

கொரோனா அறிகுறிகளுடன் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் முறையாக தரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பீகாரின் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா கிராமத்தில் மாநில அரசின் சார்பில் கொரோனா முகாம் அமைக்கப்பட்டு கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிமையில் இருக்கும் அவர்களின் பொழுதுபோக்கிற்காக சிலர் பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “கொரோனா முகாமில் இதுப்போன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா முகாமில் பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன“ என்றார்.

மேலும் செய்திகள்