புயலுக்கு பலி; குடும்பத்துக்கு இழப்பீடு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

அம்பன் புயலுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இழப்பீடு அறிவித்துள்ளார்.

Update: 2020-05-21 13:21 GMT
கொல்கத்தா,

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி நேற்று மதியம் 2.30 மணியளவில் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது.  இதனால் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  புயல் பாதிப்பினையடுத்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று நடத்தினார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய இரு மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன.  அவற்றை நாம் மீண்டும் கட்டமைக்க வேண்டும்.  மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்துவேன்.

புயலுக்கு 72 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளிவந்து உள்ளன.  உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்