வாகனங்களில் ஆபத்தை உணராமல் சொந்த ஊர் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாகனங்களில் செல்லும் போது அதன் ஆபத்தை உணராமல் சொந்த ஊர் திரும்பி செல்கின்றனர்.

Update: 2020-05-30 10:08 GMT
புவனேஷ்வர்,

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப கடும் அவஸ்தைகளை அனுபவித்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கால்நடையாகவும், சைக்கிளிலும், லாரிகளிலும், வழியில் கிடைத்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அவர்களில் பலரும் வழியில் விபத்துக்களை சந்தித்து உயிரிழக்கும் கொடுமைகள் வேறு அரங்கேறுகின்றன.

கொளுத்தும் வெயிலில் கால்களில் செருப்பு கூட இன்றி குடும்பம் குடும்பமாய் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தார்ச்சாலைகளில் மூட்டையும், முடிச்சுமாய் நடந்து செல்வதை பார்க்கிறபோது நெஞ்சம் பதறுகிறது. இதுபற்றிய தகவல்கள், ஊடகங்களில் தொடர்ந்து வெளியானதை தொடர்ந்து மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்க தொடங்கியது. இந்த சிறப்பு ரெயில்களிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இடமில்லை. எனவே இன்னும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிற அவலம் தொடர்கிறது.

இந்தநிலையில் ஒடிசாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு கட்டாக்கில் லாரிகளில் தங்கள் சொந்த இடங்களை நோக்கி பயணிப்பதைக் காண முடிந்தது. அவர்களில் ஒருவர், "நான் தெலுங்கானாவிலிருந்து வந்திருக்கிறேன், நான் கொல்கத்தாவிற்கு  செல்ல வேண்டும். தெலுங்கானாவில் இருந்து வர 3 நாட்கள் ஆகிவிட்டன.  இதுவரை 10-12 வாகனங்களை மாற்றியுள்ளேன் என வருத்தத்துடன் கூறினார்.

மேலும் செய்திகள்