உத்தரபிரதேசத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் கவிழ்ந்தது: 9 பேர் காயம்

உத்தரபிரதேசத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

Update: 2020-05-30 22:10 GMT
லக்னோ, 

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பஸ் மற்றும் ரெயில்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பீகாருக்கு இரண்டு அடுக்கு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் உள்ள கர்ஹால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனம் பஸ் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய இரண்டு அடுக்கு பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பஸ்சில் இருந்த மற்றவர்கள் வெவ்வேறு வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்