சபரிமலை கோவில் திருவிழா இந்த ஆண்டு ஒத்தி வைப்பு; கேரள அரசு முடிவு

சபரிமலை கோவில் திருவிழாவை இந்த ஆண்டு ஒத்தி வைப்பது என கேரள அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2020-06-11 10:55 GMT
திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.  இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இதன் எதிரொலியாக அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன.  எனினும், கோவில்களில் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஊரடங்கு உத்தரவின் தளர்வுகளில் ஒரு பகுதியாக, ஜூன் 8ந்தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.  இதனால், வருகிற 14ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில்  நிர்வாகம் தெரிவித்தது.

தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோவில் நடைதிறப்பு, பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்  குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என தந்திரி சார்பில் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுரேந்திரன், 14ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது என கூறினார்.

தொடர்ந்து அவர், மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14ந்தேதி திறக்கப்படுகிறது. 19ந்தேதி வரை மிதுன மாத பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கொரோனா பரவலாம் என்பதால் ஜூன் 19ந்தேதி முதல் 28ந்தேதி வரை நடக்கவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறினார்.  சபரிமலை கோவில் திருவிழாவை இந்த ஆண்டு ஒத்தி வைப்பது என அரசு முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்