நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு 2.0 ஜூலை 31 வரை நீட்டிப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு 2.0 ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-06-29 17:31 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அமலில் உள்ள பொது முடக்கத்துக்கான புதிய நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு 2.0 ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல தடை நீடிக்கிறது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31 வரை பொது முடக்கம் அமலில் உள்ளது. அந்தப் பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், சர்வதேச விமான சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜூலை 31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, மதம், கலாசார நிகழ்ச்சிகள் உள்பட மக்கள் அதிகளவில் கூடும் கூட்டங்களுக்குத் தடை நீடிக்கிறது.

ஜூலை 15 முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் பயிற்சி நிறுவனங்கள் செயல்படலாம். இங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வழங்கப்படும்.

பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் பயணங்களின்போது முகக் கவசம் அணிவது கட்டாயம்.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசியத் தேவைகள் மற்றும் மற்ற தளர்வுகள் தவிர்த்து ஊரடங்கு அமலில் இருக்கும்.

மேலும் செய்திகள்