கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென வெளியே தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-07-10 06:13 GMT
புதுடெல்லி

டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு பேருந்து ஒன்று சென்றது. அதில் தாயுடன் 19 வயது இளம்பெண் அன்ஷிகா யாதவ் பயணம் செய்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் அப்பெண்ணிடம் இருந்ததாக சக பயணிகள் சந்தேகமடைந்துள்ளனர். இதுபற்றி ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து அப்பெண்ணை வெளியே தூக்கி வீசியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பெண் அடுத்த 30 நிமிடங்களில் சாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியவே இல்லை. தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.இதுபற்றி தகவலறிந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் உடனே உத்தரப் பிரதேச மாநில போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யாதது பற்றி விளக்கம் கேட்டுள்ளார்.

இந்த கொடூர செயலை செய்த குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து நேற்று விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம் விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சம்பவம் தொடர்பாக  மதுரா போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இது இயற்கையான மரணம் என்று கூறி அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக மதுரா எஸ்.எஸ்.பி கவுரவ் குரோவர்  பிரேத பரிசோதனையில் இறப்பிற்கான காரணம் மாரடைப்பு என்று தெரியவந்துள்ளது இருப்பினும் எஸ்.பி ஷிரிஷ் சந்திராவிடம் வழக்கு குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்றார். 

டெல்லியில் வேலை செய்து வரும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் விபின் யாதவ் கூறுகையில், எனது சகோதரி மீது போர்வை ஒன்றை போர்த்தியுள்ளனர்.அதன்பின்னர் போர்வையை கொண்டு இருக்கையில் இருந்து இழுத்துச் சென்று வெளியே தள்ளி இருக்கின்றனர். அன்றைய தினம் வெயில் கடுமையாக இருந்ததால் எனது சகோதரி மிகுந்த களைப்புடன் இருந்துள்ளார். அப்போது எனது தாயார் அவர்களிடம் கெஞ்சியுள்ளார்.

ஆனால் ஓட்டுநரும், நடத்துநரும் கேட்கவில்லை. உதவிக்கு யாரும் வரவில்லை. எனது சகோதரிக்கு எந்தவித உடல்நலப் பாதிப்போ அல்லது நோய்களோ இல்லை. முன்னதாக சிறுநீரகத்தில் கல் இருந்தது. பின்னர் அது சரியாகி விட்டது. இப்படி சுகாதாரமாக இருந்த ஒரு பெண் எப்படி நீங்கள் சொல்வது போல் உயிரிழந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்