கொரோனா பணியில் பாராட்டப்பட்ட பெண் துணை கலெக்டர் மரணம்

மேற்கு வங்காளத்தில் கொரோனா பணியில் பாராட்டப்பட்ட பெண் துணை கலெக்டர் மரணம் அடைந்தார்.

Update: 2020-07-14 22:30 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் துணை கலெக்டராக தேவதத்தா ராய் (வயது 38) என்ற பெண் அதிகாரி பணியாற்றி வந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் இவர் திறம்பட செயல்பட்டார். ரெயில்களில் ஹூக்ளிக்கு திரும்பிய இடம் பெயர்ந்த தொழிலாளர்களை முகாம்களில் கொண்டு போய்ச்சேர்த்து, அந்த முகாம்கை-ளை சிறப்பாக நிர்வகித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டன. அதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் டம்டம் பகுதியில உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவர் கடுமையான சுவாச கோளாறால் அவதிப்பட்டார். உடனடியாக செராம்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். அவருக்கு கணவரும், 4 வயது மகனும் உள்ளனர்.

தேவதத்தா ராயின் மறைவுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “தேவதத்தா ராய் அகாலமாக மரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். இளம் அதிகாரியான அவர் முன்வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போரிட்டார். தனது கடமைகளை மிக சிறப்பாக அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றினார்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்