விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கு; சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை

விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2020-07-22 18:38 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் விபசார தொழிலை செயல்படுத்தி வந்தவர் சோனு பஞ்சாபன் என்ற கீதா அரோரா.  தெற்கு டெல்லியை அடிப்படையாக கொண்டே இவரது தொழில் நடந்து வந்தது.  பணம் படைத்தவர்களுக்கு தேவையான மாடல்கள் மற்றும் நடிகைகளை சப்ளை செய்து வந்ததுடன், கடத்தப்பட்ட மற்றும் மதுபானம் கொடுத்து கொண்டு வரப்பட்ட சிறுமிகளையும் இந்த தொழிலில் பயன்படுத்தி வந்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு போலீசார் அறிக்கையின்படி, டெல்லியின் வசதி படைத்தவர்களின் பகுதிகள், 5 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளுக்கு தேவையான பாலியல் தொழிலாளர்களை அனுப்பி வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.  கொலை வழக்கும் இவர் மீது உள்ளது.

சோனு பலமுறை போலீசாரிடம் பிடிபட்டு உள்ளார்.  ஆனால் தண்டனையில் இருந்து தப்பி வந்துள்ளார்.  பின்னர் 2007ம் ஆண்டில் சட்டவிரோத கடத்தல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியானார்.  அதே வழக்கிற்காக கடந்த 2008ம் ஆண்டில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதன்பின்பு கடந்த 2011ம் ஆண்டு மீண்டும் விபசார தொழிலில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் சோனு.  அவரது 4 கூட்டாளிகள் மற்றும் 4 ஆண்களும் விபசார சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

சோனுவுடன் திருமணம் நடந்த 3 பேரும் குற்றவாளிகள் என்பதுடன் போலீசாரின் என்கவுண்ட்டரில் உயிரிழந்து விட்டனர்.  சோனு பஞ்சாபன், அவரது கூட்டாளி சந்தீப் பெட்வாலுடன் விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் திகார் சிறையில் உள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.  அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உடனடியாக தீன் தயாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவரது உடல்நிலை சிகிச்சைக்கு பின் சீரானது.

இந்த வழக்கில் டெல்லி கோர்ட்டு ஒன்று சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.  ஒரு பெண் என அழைக்கப்படுவதற்கான அனைத்து வரம்புகளையும் அவர் மீறி விட்டார்.  அதனால் கடுமையான தண்டனை அனுபவிக்க அவர் தகுதியானவர் என தீர்ப்பில் கூறப்பட்டது.  இது தவிர்த்து சோனுவுக்கு ரூ.64 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்